(முஹம்மது நியாஸ்)
நாம் வாழ்கின்ற இலங்கைத் திருநாடு முழுவதுமாக சுதந்திரமடைந்து அறுபத்தி ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்ட இத்தருணத்தில் சுதந்திரத்துடன் தொடர்பு பட்ட சில பதிவுகளை சற்று நாம் மீட்டிப்பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இலங்கை நாடு ஆரம்ப கால வரலாறுகளில் முழுக்க முழுக்க மேற்கத்தேயவாதிகளின் ஆளுகைகளுக்குள்ளேயே அகப்பட்டிருந்தது.
சுமார் 1500ம் ஆண்டு தொடக்கம்,சுதந்திரம் அடைந்த வருடமான 1948 வரைக்குமுள்ள காலப்பகுதியை நாம் எடுத்து நோக்கினால் போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள், ஆங்கிலேயர்கள் என மேலை நாட்டவர்களின் ஆகிரமிப்புக்களுக்கு பெயர் போன ஒரு தீவாகவே இலங்கைத் தீவு திகழ்ந்துள்ளது.
இதற்கு மிகவும் பிரதான காரணியாக அமைந்தது நமது நாட்டில் இன்றளவும் காணப்படுகின்ற இயற்கை வளங்களாகும்.
இவ்வளங்களை கைப்பற்றி அவற்றை தங்களின் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் ஒல்லாந்தர்களும் ஆங்கிலேயர்களும் பெரும் முனைப்புடன் செயல்பட்டனர்.
முஸ்லிம்களின் பிரவேசம்.
ஆங்கிலேயர்கள் இலங்கை நாட்டை ஆக்கிரமிப்பதற்கு முன்னரே முஸ்லிம்கள் நாட்டின் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்து வந்தனர். இலங்கையில் முஸ்லிம்களின் வரலாறு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் அப்பாற்பட்டது என்பதனை நாம் வரலாற்றுக் குறிப்புக்களில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.
இலங்கைக்கு முதன்முதலில் குடியேறிய முஸ்லிம்களில் பெரும்பாலானோர் துருக்கி நாட்டிலிருந்து வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
இதன் காரணமாகவே இலங்கை முஸ்லிம்களிடத்தில் “துருக்கி தொப்பி” எனப்படும் ஒரு வகைத் தொப்பியும் புழக்கத்தில் வந்தது.
இவ்வாறு அரபு நாடுகளிலிருந்து இலங்கையை நோக்கி வியாபாரத்திற்காக வந்த முஸ்லிம்கள் இலங்கையின் கரையோரப்பிரதேசங்களில் தங்களின் வாழ்விடங்களை ஏற்படுத்தினர்.இப்போதும் கொழும்பு,பாணந்துறை,பேருவளை,காலி,கல்முனை,திருகோணமலை போன்ற கடற்கரையை அண்டியுள்ள இடங்களில் இருக்கின்ற சில அடக்கஸ்த்தலங்கள் இதற்குப் பெரும் சான்றாகும்.
காலப்போக்கில் வியாபார நோக்கத்திற்காக வந்த முஸ்லிம் வர்த்தகர்கள் நாட்டின் அப்போதைய முக்கிய தலைமை நகரங்களான கொழும்பு,கண்டி,குருநாகல்,அனுராதபுரம் ஆகிய நகரங்களுக்கும் சென்று தங்களின் நேர்மையான கொடுக்கல் வாங்கல் முறைமை போன்ற அழகிய நடைமுறைகள் மூலம் அங்குள்ள மக்களோடும் அரச பிரதானிகளோடும் நட்புறவை ஏற்படுத்திக்கொண்டனர்.
இதன் காரணமாக அப்போது இருந்த மன்னர்களும் ஆட்சியாளர்களும் முஸ்லிம்களுக்கு உயரிய அந்தஸ்த்தையும் கண்ணியத்தையும் அளித்தது மாத்திரமல்லாது பல அரச பதவிகளுக்கும் உரித்துடையோராக்கினார்கள்.
இதனால் அந்த ஆட்சியாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மிகவும் இறுக்கமான பிணைப்புக்கள் பல காணப்பட்டன.
மேலை நாட்டவர்களின் ஆக்கிரமிப்புக்கள்.
இலங்கையை மேலை நாட்டவர்கள் கைப்பற்றி அங்கே அவர்களின் ஆட்சிபீடங்களை நிறுவியபோது முஸ்லிம்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகளாகவே காணப்பட்டனர்.
முஸ்லிம்களையும் முஸ்லிம்களின் கலாச்சாரத்தையும் கருவறுப்பதையே அப்போதும் குறிக்கோளாகக் கொண்டிருந்த மேலைதேயர்களால் முஸ்லிம்கள் மிகப்பாரிய அச்சுறுத்தல்களை எதிர்நோக்கினர்.
நாட்டை வென்றெடுப்பதற்காக வேண்டி அன்றைய காலகட்டத்தில் இருந்த மன்னர்களுடன் சேர்ந்து முஸ்லிம்கள் பெரும் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு அதில் ஏராளமான முஸ்லிம்கள் ஆங்கிலேயர்களினால் கொல்லப்பட்டனர்.
முஸ்லிம்களின் சொத்துக்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன.
ஆங்கிலேயர்கள் மிகவும் வலுக்கட்டாயமாகவே முஸ்லிம்களிடத்தில் மேற்கத்தேயக் கலாச்சாரத்தை புகுத்த முனைந்தனர்.
அப்போதிருந்த பள்ளிக்கூடங்களில் முஸ்லிம்கள்,சிங்களவர்கள்,தமிழர்கள் உட்பட அனைவரும் தங்களின் கலாச்சாரங்களையே நடைமுறைப்படுத்த வேண்டுமென்று ஆங்கிலேயர்களால் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை மீறியோர் கொடூரமான முறையில் பகிரங்கமாக தண்டிக்கப்பட்டனர்.
இவை எல்லாவற்றையும் தாண்டி பலவருட காலம் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே சகோதரத்துவம், நாட்டுப்பற்று, விடுதலைக்கான தாகம் என்பன தாரளமாகவே காணப்பட்டன.
இவ்விடுதலை வரலாற்றில் முஸ்லிம்களின் வகிபாகத்திற்கு மிகவும் முன்னுதாரணமாக DB.ஜெயா, SIR ராசிக் பரீத், பதியுத்தீன் மஹ்மூத் போன்றவர்களை நாம் குறிப்பிட முடியும்.
இவ்வாறு இலங்கைத் திருநாட்டின் சுதந்திர வரலாற்றில் முஸ்லிம்களுக்கென்று ஒரு கணிசமான பகுதியே இருக்கிறது என்றால் அதுமிகையாகாது.
சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கை முஸ்லிம்கள் .
இலங்கைத் திருநாடு சுதந்திரமடைந்ததற்குப் பின்னரும் ஓரிரு தசாப்தங்களில் இந்நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப்பயங்கரவாதத்தில் முஸ்லிம்கள் ஒரு சிறுபானமையினர் என்ற வகையில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டனர்.
விடுதலைப்புலிகளினால் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாத அடக்குமுறைகளின் வடுக்கள் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, ஏறாவூர், காத்தான்குடி, அக்கரைப்பற்று, கல்முனை, அம்பாறை, திருகோணமலை போன்ற நாட்டின் வடகிழக்குப் பகுதியில் வாழ்கின்ற முஸ்லிம்களின் வாழ்க்கையில் இன்றளவும் பிரதிபலிக்கின்றது.
1990ம் ஆண்டு,
வடக்கில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களை அவர்களின் உடம்பில் ஒட்டியிருந்த ஆடைகளைத் தவிர வேறுதுவும் இங்கிருந்து எடுத்துச் செல்லக்கூடாதென்ற கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரே இரவில் அத்தனை முஸ்லிம்களையும் தங்களின் தாயகத்திலிருந்து விடுதலைப்புலிகள் துப்பாக்கி முனைகளில் விரட்டியடித்தமை,
1990ம் ஆண்டு,
காத்தான்குடிப் பள்ளிவாயில்களில் இரவுத்தொழுகையை நிறைவேற்றிக்கொண்டிருக்கும் வேளையில் மூன்று வயதுக்குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான அப்பாவிப்பொதுமக்கள் மீது புலிகள் ஆடிய கோரத்தாண்டவம்,
அதே வருடம் அதே மாதம்,
ஏறாவூர் பிரதேசத்தில் முஸ்லிம்கள் மாத்திரமே வாழ்ந்து வந்த ஒரு கிராமம் விடுதலைப்புலிகளினால் இரவோடிரவாக ஆயுத முனைகளில் கொள்ளையிடப்பட்டு சுமார் மூன்னூற்றியைம்பதுக்கும் மேற்பட்ட உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
விடுதலைப்புலிகளின் அழிவை வைத்து இன்று மனித நேயம் என்ற பெயரில் பிழைப்பு நடத்துகின்ற புலிப்பினாமிகள் யாரும் அதே விடுதலைப்புலிகளினால் ஏறாவூரில் ஒரு நிறைமாதக் கர்ப்பிணித் தாயின் வயிறு கிழிக்கப்பட்டு வயிற்றிலிருந்த சிசுவை வெளியே எடுத்து முட்கம்பி வேலிகளில் தொங்கவைக்கப்பட்டிருந்த அரக்கத்தனத்தை கண்டுகொள்வதே கிடையாது.
இதுவேதான் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை முஸ்லிம்கள் மத்தியில் நியாயப்படுத்துவதற்கு எள்முனையளவும் தகுதியற்றுப்போனமைக்கு இன்றளவும் மிக முக்கிய காரணமாகும்.
இவ்வாறு விடுதலை என்ற பெயரில் ஒரு சகோதர சமூகம் மேற்கொண்ட அடக்கு முறைகளிலும் வன்முறைகளிலும் உயிர்,பொருள்,உடமை என அனைத்தையும் இழந்து தெருவோர அனாதைகளாய் நின்ற ஒரு சமூகம் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தில்லை.
இருந்தும் முஸ்லிம்கள் பின்பற்றுகின்ற மார்க்கமாகிய இஸ்லாத்தில் பொறுமை,விடாமுயற்சி,சகோதரத்துவம்,விட்டுக்கொடுப்பு,மன்னித்தல்,மனிதநேயம் போன்ற நற்பண்புகள் அதிகளவில் போதிக்கப்படுவதினால் இறுதிவரைக்கும் முஸ்லிம் சமூகம் பொறுமையையும் முயற்சியையும் இழக்கவில்லை.
அதனாலேதான் முப்பது வருடங்களில் தாங்கள் இழந்த பொருளாதாரத்தை ஒரு சில குறுகிய காலத்திற்குள்ளேயே பெரும்பாலான முஸ்லிம்களால் மீண்டும் கட்டியெழுப்ப முடிந்தது.
இன்றும்கூட எந்தவொரு சமூகமும் இயற்கை அனர்த்தமாக இருக்கட்டும் இன்னும் ஏனைய இழப்புக்களாக இருக்கட்டும் அங்கே முதலில் கைகொடுக்க முன்வருவது இஸ்லாமிய மனிதநேய அமைப்புக்களே.
இவ்வாறு இலங்கைத் திரு நாட்டின் சுதந்திரத்திற்காகவும் சரி ஜனநாயகத்திற்காகவும் சரி,முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு மிகவும் பெறுமதி வாய்ந்தது.
வடகிழக்கில் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் இடையில் கூட இலங்கை இராணுவத்திலும் முஸ்லிம்கள் கணிசமான அளவில் பங்காற்றியுள்ளனர்.கிழக்கு மாகாணத்தில் சுமார் நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம் இராணுவ வீரர்கள் விடுதலைப்புலிகளினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்றும் இலங்கை இராணுவத்தில் உளவுத்துறை போன்ற முக்கிய பொறுப்புக்களில் முஸ்லிம்களின் பங்கீடு மிகவும் பெறுமதி வாய்ந்தது.
சுதந்திரமடைந்த ஒரு நாட்டில் மக்களின் உரிமைகள்
பொதுவாக மனித உரிமை என்பது அடுத்தவர்களை எந்தவொரு வகையிலும் பாதிக்காத முறையில் தனது செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்படும் அனுமதியே மனித உரிமையாகும்.1948ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் தீர்மானத்திற்குக் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் சாசனத்தின் சுருக்கம் இதுவே.
ஒருவர் தன்னிடமுள்ள கைத்தடியை தனது விருப்பம் போல சுழற்ற முடியும்.அது அவரின் உரிமை.அந்த உரிமையானது,அடுத்தவரின் மூக்கின் நுனியோடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் சுதந்திரமடைந்த ஒரு நாட்டில் எந்தவொரு தனிமனிதனுக்கும் அல்லது ஒரு சமூகத்திற்கும் தாங்கள் விரும்பிய ஒரு மதத்தை சரிகாண்பதற்கும் அதனை பின்பற்றுவதற்கும் பூரண அனுமதியுண்டு.அதேபோல தொழில்,கலாச்சாரம்,மொழி போன்ற அனைத்துவிதமான செயற்பாடுகளையும் தங்களின் விருப்பம் போல மேற்கொள்வதற்கு எந்தவொரு தடையும் கிடையாது.
மாறாக ஒருவரின் விருப்பு வெறுப்புக்களை தடை செய்வதோ அல்லது அதனை முறையற்ற வகையில் விமர்சிப்பதோ அப்பட்டமான அடிப்படை மனித உரிமை மீறலாகும்.
சுதந்திர இலங்கையில் முஸ்லிம் சமூகம்.
சுதந்திரமடைந்த ஒருநாட்டில் வசிக்கின்ற ஒரு சமூகத்தின் உரிமைகளே நாம் மேலே சுட்டிக் காட்டியவையாகும்.அவற்றை சற்று மனதில் நிறுத்திக் கொண்டு நமது நாட்டில் இப்போது முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளும் சுதந்திரமும் எந்தளவில் பாதுகாக்கப்படுகின்றதென்பதை உற்று நோக்குவோம்.
நாட்டின் அனைத்து இனமக்களும் இன நல்லுறவோடு வாழ்ந்து வரும் இவ்வேளையில் இந்நாட்டின் இறைமையையே கேள்விக்குறியாக்கும் விதத்தில் சிங்களப்பேரினவாதம் இன்று முஸ்லிம்களுக்கெதிராக தலை தூக்கியுள்ளது.
கடந்த இரண்டு வருட காலப்பகுதிக்குள் நாட்டில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் முஸ்லிம்களின் அடிப்படை உரிமையான மதச்சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாயில்கள் தகர்ப்பு,முஸ்லிம்களின் குடியிருப்புக்கள் அகற்றப்பட்டமை போன்ற ஒரு சமூகத்தின் மீதான அதிகபட்ச அடக்குமுறைகள் முஸ்லிம்கள் மீது பிரயோகிக்கப்படுவதானது இந்நாட்டின் சுதந்திரத்தை மீள் பரிசோதனை செய்வதனையே நமக்கு உணர்த்தி நிற்கின்றது.
முஸ்லிம்களின் வர்த்தக செயற்பாடுகள் மற்றும் ஹலால் சான்றிதழ் போன்றவற்றுகெதிரான ஹெல உறுமய,போதுபல சேனா போன்ற சிங்களப்பேரினவாத அமைப்புக்களின் தொடர்ச்சியான மதரீதியான அச்சுறுத்தல்கள் இந்நாட்டில் மீண்டுமொரு சுதந்திரப்போரையே வேண்டி நிற்கின்றன.
நடைமுறை ரீதியாக இலங்கை நாடு சுதந்திரமடைந்து அறுபத்தி ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன என்று நாம் எவ்வளவுதான் வாயளவில் சொல்லிக்கொண்டாலும் ஒப்பீட்டளவில் இன்று நாட்டின் சிறுபான்மையினராகிய முஸ்லிம்களின் குரல்வளைகள் நசுக்கப்பட்டுக் கொண்டிருப்பதே மறுக்கமுடியாத உண்மையாகும்.
சுதந்திரமான மத வழிபாடுகள், வர்த்தக நடைமுறைகள்,அச்சமற்ற குடியிருப்புக்கள் போன்ற அடிப்படை உரிமைகளே இன்று ஒரு முஸ்லிம் சமூகத்தின் எட்டாக்கனியாக இருக்கும் பொழுது வெறும் வாயளவிலே சகல இன மக்களுக்கும் நல்வாழ்வு என்று துதிபாடுவதில் அர்த்தமில்லை.
தாய் நாட்டின் விடுதலைக்காகவும் சரி,நாட்டின் தலைவர்கள் சில அந்நிய சக்திகளால் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்ட நேரத்திலும் சரி முஸ்லிம் சமூகம் தாய்நாட்டின் மீதான தங்களின் கடமையினை செய்வதற்கு ஒரு போதும் பின்வாங்கியதில்லை.
இந்நாட்டில் ஏற்பட்ட எந்தவொரு நெருக்கடியான நேரத்திலும் ஒரு சிறுபான்மை சமூகம் தங்களின் உச்ச கட்ட அர்ப்பணிப்பையும் வழங்கி நாட்டை மீட்டடுத்ததென்றால் அது முஸ்லிம் சமூகம் மட்டுமே.
இவ்வாறு இந்நாட்டில் சுதந்திரப் போராட்டம்,விடுதலைப்புலிகளுடனான உள்நாட்டு யுத்தம் போன்றவற்றில் தங்களின் உயிர், பொருள், உடைமைகள் என அனைத்தையும் இழந்து நாட்டின் ஜனநாயகத்திற்காக போராடிய முஸ்லிம்கள் இன்று இந்நாட்டில் இரண்டாந்தரப் பிரஜைகளாகப் பிரயோகித்து அவர்கள் மீது சிங்களப் பேரினவாதிகளால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும்போது இறைமையுள்ள அரசாங்கம் வெறுமனே வேடிக்கை பார்ப்பது சர்வதேச அளவில் இந்நாட்டிற்கு பாரிய அபகீர்த்தியையே ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம்களுக்கெதிரான அடக்கு முறைகளை நாட்டிலுள்ள ஓரிரு சிறு குழுக்களே மேற்கொள்கின்றன என்றால் அவற்றை கண்ட மாதத்திலேயே கிள்ளி எறிவதொன்றும் பெரிய விடயமல்ல. ஏனெனில், இலங்கைத் திருநாட்டில் மூன்று தசாப்த காலமாக வேரூன்றியிருந்த பங்கசுக்கலான பாசிசப்புலிகளை வெறும் இரண்டே வருடங்களில் அடிச்சுவடே தெரியாமல் அழித்தொழித்த உலகமகா வீரர்கள் எமது நாட்டின் இராணுவத்தினர்.அத்தகைய தலைசிறந்த வீரர்களுக்கு இந்நாளில் முழு இலங்கை நாடும் நன்றி கூறக் கடமை பட்டுள்ளது.
எனவே, சுதந்திரமடைந்த இலங்கை நாட்டில் சிங்களவர்கள்,தமிழர்கள்,முஸ்லிம்கள்,கிறிஸ்த்தவர்கள் என அனைத்து இன மக்களுக்கும் சம அளவிலான உரிமைகள் வழங்கப்படவேண்டும்.எந்தவொரு சமூகமும் அதன் மதவழிபாடுகள், வர்த்தக நடவடிக்கைகள், குடியுரிமைகள் போன்றவற்றை தங்களின் விருப்பத்திற்கேற்ற வகையில் அமைத்துக்கொள்வதற்கு தாராளமான வழிவகைகளை அமைத்துக்கொடுப்பது ஒரு இறைமையுள்ள அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.
அது போன்று ஒரு சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் தனி நபர்கள் அமைப்புக்கள் அவை எந்த மதத்தைச் சார்ந்தவையாக இருப்பினும் அவற்றை உரிய முறையில் இனங்கண்டு களைந்தெறிவதற்கு இந்நாட்டின் சட்ட மூலங்கள், பாதுகாப்புத்தரப்பு என்பன முன்வருவது அவசியமாகும்.
அதுவே சுதந்திரம் பெற்ற இலங்கைத் திருநாடு இந்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் தலை சிறந்து விளங்குவதற்கு பிரதான தகைமையாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.